பாற்கடலைக் கடையும்போது மந்தாரமலை அசையாமல் இருக்கும் பொருட்டு, திருமால் ஆமை வடிவம் கொண்டு, தனது முதுகில் தாங்கினார். அதை தாங்கி நிற்கும் வலிமையைப் பெற தன்னுடைய பங்கு குறித்து இறுமாப்படைந்து, கடலைக் கலக்கி ஆர்ப்பாட்டம் செய்தார்.
ஆமையின் செருக்கை அடக்கி, அவதார நோக்கத்தைப் புரிய வைக்க எண்ணிய சிவபெருமான், ஆமையின் உயிரைப் போக்கி அதன் ஓட்டை அணிந்தார். கடலைக் கலக்கியதால் துன்புற்ற உயிரினங்களுக்காக வருந்தி, இத்தலத்திலுள்ள முருங்க மரத்தின் கீழ் ஜோதி வடிவமாக விளங்கிய சிவலிங்கத்தைப் பூஜித்தார். அவர் வழிபட்ட லிங்கமே கச்சபேஸ்வரர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
திருமால் ஆமை வடிவில் சிவலிங்கத்தைப் பூஜிக்கும் காட்சி, ஸ்தல விருட்சமான முருங்கை மரத்தின் கீழ் புடைப்பு சிற்பமாக இருக்கின்றது. இடுப்பளவிற்கு மேல் மனித வடிவிலும், கீழ்ப்பகுதி ஆமை வடிவுடனும் தோன்றும் திருமால், சிவபெருமானைப் பூஜிக்கும் காட்சி அழகாக இருக்கின்றது.
'சித்' என்றால் நுண்ணறிவு் 'சித்தீஸ்வரம்' என்றால் ஒப்பற்ற ஆற்றலை பெறும் இடம் என்று கொள்ளலாம். சித்தீச்சரங்களை வணங்குவதால் சித்தர்களின் அருளும் சேர்ந்து கிடைப்பதாக ஐதீகம்.
ததீசி முனிவருக்கும், குபன் எனும் அரசனுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் கோபமுற்ற மன்னன் தனது வஜ்ராயுதத்தால் முனிவரை வெட்டினான். சுக்கிரன் முனிவரை உயிர் பெறச் செய்தார்.
சுக்கிரனின் அறிவுரைப்படி ததீசி முனிவரும், இஷ்ட தீர்த்தத்தில் நீராடி, இஷ்ட சித்தீஸ்வரரைப் பூஜித்து வஜ்ர தேகத்தைப் பெற்றார். பின்னர் ததீசி முனிவர் அந்த மன்னனை வெற்றி கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சூரியன் அமைத்த சூரிய தீர்த்தமே இஷ்ட சித்தி தீர்த்தம் எனப்படுகின்றது. கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இதில் மூழ்கி எழுந்து சித்தீஸ்வரர்களையும், கச்சபேஸ்வரரையும் வழிபடுகின்றனர். சந்திரன், குபேரன், சாம்பன், நளன், ராமர், பஞ்ச பாண்டவர்கள் ஆகியோர் இத்தீர்த்தத்தில் நீராடி நலன் பெற்றனர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.