சென்னையிலுள்ள பஞ்சபூத ஸ்தலங்களுள் இத்தலம் நீருக்கானது என்பர்.
அயோத்தியை ஆண்ட சகரன் எனும் அரசன், தனது நாட்டின் சுபிட்சத்திற்காக அஸ்வமேதயாகம் மேற்கொண்டான். வேள்விக் குதிரையை எல்லா தேசங்களுக்கும் அனுப்பி வைத்தான். அந்தக் குதிரையை இந்திரன் கவர்ந்து சென்று, கபில முனிவர் தவம் செய்து கொண்டிருக்கும் குகை ஒன்றில் பாதாளத்தில் ஒளித்து வைத்து விட்டான். குதிரை திரும்பி வராததால், சகரன் தனது அறுபதாயிரம் புதல்வர்களை அனுப்பி தேடி வரச் சொன்னான்.
குதிரை பாதாளத்திலுள்ள குகை ஒன்றில் இருப்பதைக் கண்ட சகரனின் புதல்வர்கள், கபிலர்தான் அதை கவர்ந்து எடுத்து வந்திருக்கிறார் என எண்ணி அவரிடம் தகாது நடந்து கொண்டனர். இதனால் கோபமுற்ற கபில முனிவர் அவர்களை எரித்து சாம்பலாக்கி விட்டார்.
குதிரையையும் புதல்வர்களையும் தேடி வர, பேரன் அம்சுமானை அனுப்பினான் அரசன். நடந்தவற்றை கபிலர் மூலமாக அறிந்து கொண்ட அம்சுமான், கபிலரின் யோசனைப்படி, கங்கையை பூமிக்கு கொண்டு வந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்க வேண்டி, தவம் மேற்கொண்டான். எண்ணம் தொடர்ந்து அவனது வாரிசான திலீபனும், பின்னர் பகீரதனும் தவத்தை தொடர்ந்தனர்.
பகீரதனுக்கு கங்கை நதியை அளித்தார். அதை தனது முன்னோர்களின் சாம்பல் மீது தெளித்து அவர்களை நற்கதி அடையச் செய்தான் பகீரதன் என வரலாறு.
பின்னர் நாட்டை ஆண்டு கொண்டிருந்த பகீரதன், நாரதரை அவமதித்ததினால் அவரது சாபம் கொண்டு அல்லலுற்றான். தான் கொண்ட சாபம் நீங்கி நற்பயன்களைப் பெற, பூமியில் 1008 சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடலானான்.
இங்குள்ள புரசை மரத்தின் கீழ் அமர்ந்து பகீரதன் தவம் மேற்கொண்டு, கங்கையை வரவழைத்ததாக கூறப்படுகிறது. பகீரதன், தான் ஸ்தாபித்த 1008 லிங்கங்களுள், 1008வது லிங்கத்தை இங்கே ஸ்தாபித்து, அதற்கு கங்காபிஷேகம் செய்து சாப விமோசனம் பெற்றதாக ஸ்தல வரலாறு.
கங்கையை சிரசில் தாங்கியதால் இவ்விறைவனுக்கு கங்காதரேஸ்வரர் என்ற பெயர் வந்தது.
அகஸ்தியர் மூலமாக கிடைத்த கங்காஜல கமண்டலத்தை பகீரதன் வைத்த இடமும் ஒரு புரசை மரத்தடியில்தான். தற்போது அந்த இடத்தில் ஆலயத்தின் தீர்த்தக் கிணறு உள்ளது. இந்தக் கிணற்று நீர் எப்போதுமே வற்றுவதில்லை எனக் கூறப்படுகிறது.
புரசு மரங்கள் அடர்ந்திருந்த பகுதி என்பதால் இவ்ஊரை புரசைப்பாக்கம் என அழைத்தனர். நாளடைவில் மருவி புரசைவாக்கம் என்றானது. யானைகவுனி வழியாக போகும் யானைகளுக்கு, இங்கு கயிறு தயாரித்தார்களாம். புரசை என்றால் யானை கட்டும் கயிறு என்ற பொருளும் உண்டு.
கோவில் நந்தவனத்தில் இறைவனும்-இறைவியும் பாம்பாக உலா வருவதாக ஐதீகம். இந்த நந்தவனத்திலுள்ள அழகான பெரிய லிங்கத்தை பக்தர்களே தொட்டு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம்.
தென்கிழக்கு மூலையில் குருந்தை மரம் காணப்படுகிறது. இதனடியில் இருந்து கொண்டு மாணிக்கவாசகர் போதனை செய்ததாக வரலாறு.
பலாசமரம், முருக்கைமரம், சிஞ்சுகம் என்றெல்லாம் அழைக்கப்படும் புரசை மரமே இங்கு ஸ்தல விருட்சமாக உள்ளது.