வேண்டுபவர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் மன அனுகூலம் கொண்டவராதலால் மனானுகூலேஸ்வரர் என்றும், பக்தர்களின் மனதோடு ஒத்துப் போய் ஆட்கொள்வதால் ஒத்தாண்டேஸ்வரர் என்றும் போற்றப்படுகிறார்.
கரிகால சோழன் இவ்வூர் வழியே தனது யானை மீது செல்கையில், காட்டுக் கொடிகளில் யானையின் கால் சிக்குண்டு, நடக்க முடியாமல் நின்றது. கொடிகளிலிருந்து சிக்குண்ட யானையின் காலை விடுவிக்க, தனது வாளால் கொடிகளை வெட்டலானான் சோழன்.
வெட்டுண்ட கொடிகளிலிருந்து ரத்தம் பீறிடவே, கொடிகளை விலக்கிப் பார்த்தான் அரசன். கொடிகளினிடையே ஒரு சிவலிங்கம் இருப்பதையும் அதிலிருந்து ரத்தம் வருவதையும் பார்த்தான்.
சிவ அபச்சாரம் செய்து விட்டோமே என்று கலங்கிய மன்னன், தனது கைகளை வெட்டிக் கொள்ள முற்பட்டான். வாளால் கைகளை வெட்டிக் கொண்டதும், அங்கு பிரத்யட்சமான சிவபெருமான், புதைந்துக் கிடக்கும் லிங்கத்தை வெளிப்படுத்த நடந்த நிகழ்ச்சியே இது எனக் கூறி, வெட்டுண்ட கைகளை திரும்ப தந்தார். இதனால் 'கை தந்த பிரான்' எனப் பெயர் கொண்டார்.