மூலவர்: ஐராவதேச்வரர், அம்பாள்: ஐராவதேச்வரி.
ஐந்து தளங்களைக் கொண்ட விமானம் உடைய கோவில் இது. கடைசி தளத்தின் நான்கு மூலைகளிலும் நந்திகள் உள்ளன.
அதற்கு மேல் வட்ட வடிவ சிகரங்கள் உள்ளன. பிரதான கருவறையில் மூலவரையும் அம்பாளையும் தரிசிக்கலாம்.
மகா மண்டபத்திற்கு முன்பாக, தூண்கள் தாங்கும் நூதன மண்டபம் சக்கரங்கள் கொண்டு ரதம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. கற்குதிரைகள் தேரை இழுத்துச் செல்லும் பாவனை. இதை ராஜகம்பீரமண்டபம் என்பார்கள். இதனுள் இருக்கும் மாடம் ஒன்றில் காணப்படும் ஸ்ரீ கங்கா தேவியின் திருவுருவத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம்... அத்தனை அழகு.
தெற்கு பிரகாரத்தில், அலங்கார மண்டபத்திற்கு செல்லும் படிக்கட்டுக்களில் சிங்கம் ஒன்று யானையின் மீது பாய்ந்து அதன் மத்தகத்தை கடிக்கும் காட்சி தத்ரூபமாக உள்ளது. மண்டபத்து தூண்களில் அரிய வேலைப்பாடுகளையுடைய சிற்பங்களைக் காணலாம். ஒன்றைப் போல் மற்றொன்று இல்லாமல் செய்திருப்பது புதுமை. விரலளவு விநாயகர் சிற்பம் (ஒண்ணரை விரக்கடையளவு) வெகு நேர்த்தியாக உள்ளது.
மகா மண்டபத்தின் பின்புறமாக சரபேஸ்வரர் சந்நிதி இருக்கின்றது. எட்டுக் கால்கள், இரண்டு இறக்கைகள் கொண்ட உக்ர மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். நரசிங்கத்தின் உதரத்தில் சரபத்தின் நகங்கள் பதிந்துள்ளன. நரசிங்கத்தின் கையிலிருந்து சங்கு - சக்கரங்கள் நழுவியிருக்கின்றன.
கோவிலின் உட்புறமாக ஐராவதத்தின் மேலிருக்கும் இந்திரன் சிற்பம் அழகாக இருக்கின்றது.
மிதக்கும் தெப்பம் போன்ற வடிவில் ஒரு சந்நிதி வடக்கு பிரகாரத்தில் உள்ளது. அதில் அம்பிகை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். தேவநாயகி என்றும் கூறுவர். அம்பிகை கோவிலின் யாளித் தூண்கள், பாம்பு ஜன்னல்கள், எரியும் அகல் விளக்கு சிற்பங்கள் ஆகியவை யாவும் அதிசயிக்கும் வகையில் உள்ளன.
மேல் தளத்திலுள்ள சிறு மண்டபத்தினுள்ளே உமையவளும் - சிவபெருமானும் திருக்கயிலாயம் போல அமர்ந்துள்ள காட்சியை காண ஆனந்தம் பெருகுகிறது. ஏழு நதிப் பெண்களின் திருவுருவங்கள் அற்புதமாக இருக்கின்றன.