பாண்டியனின் வெப்பு நோயினை, மடப்பள்ளி சாம்பலை பூசி குணமாக்குகிறார் திருஞானசம்பந்தர். இதில் தோற்றுப் போன சமணர்கள் ஞானசம்பந்தரை அனல் வாதம் செய்ய அழைத்தனர். சம்பந்தரும் சமணர்களும் அவரவர் கருத்துக்களை ஏட்டில் எழுதி தீயிலிடவேண்டும் என நிபந்தனை.
சமணர்கள் தீயிலிட்ட ஏடு எரிந்து சாம்பலாயின. ஞான சம்பந்தரின் திருநள்ளாற்றுப் பதிக ஏட்டினை நெருப்பில் போட்டதும் அது கருகாமல் பச்சைப் பசேலென நின்றது.
அனல் வாதத்திலும் தோற்றுப் போன சமணர்கள் ஞானசம்பந்தரை புனல்வாதம் செய்ய அழைத்தனர். வாதி - பிரதிவாதி இருவரும் தத்தம் கருத்துக்களை ஏட்டில் எழுதி நீரில் இட வேண்டும். எவருடையது அழியாமல் இருக்கிறதோ அவரே வென்றவர் ஆவார் - இதுவே புனல்வாத போட்டி.
சமணர்கள் தங்களது ஏட்டில் அத்தி - நாத்தி என எழுதி ஆற்றிலிட்டனர். விரைவாக ஆற்றில் ஓடி கடலுக்குள் கலந்து மறைந்து போயிற்று. வாழ்க அந்தணர் வானவர் ஆவினம் எனும் பதிகத்தை சம்பந்தர் ஏட்டில் எழுதி வைகை ஆற்றில் விட்டார். ஏடு ஓடும் திசையை எம்பி எம்பி பார்த்த கூன் பாண்டியனின் கூன் நிமிர்ந்தது. நீரை எதிர்த்து சுவடி செல்லும் வேகத்தை, குதிரையில் பின் தொடர்ந்து சென்று பார்த்தார் அமைச்சர் குலச்சிறையார்.
வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன் பொன்னியல் திருவடி புது மலரவை கொடு மன்னிய மறையவர் வழிபட அடியவர் இன்னிசை பாடலார் ஏடகத்தொருவனே
என்ற பதிகத்தை ஞானசம்பந்தர் பாடியதும் ஏடு நின்று விட்டது. ஏடு நின்ற இடம்தான் திருவேடகம். திரு - ஏடு - அகம் என்பதே திருவேடகம். எனவே இவ்வூர் திருவேடகம் எனப் பெயர் கொண்டது.
வாது வென்ற விநாயகர் மீன் வடிவம் கொண்டு ஆற்றில் மிதந்து சென்ற ஏட்டினை இவ்விடத்தில் நிறுத்தியதாக திருவேடக ஸ்தல புராணம் கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள லிங்கம் ஏடு போல தோற்றமளிப்பதால் ஏடகநாதர் எனப் பெயர் வந்ததாகவும் கூறுவர். ஞானசம்பந்தர் பிரதிஷ்டை செய்து பூஜித்த லிங்கம். பார்த்த பிரகரம் எனும் அடையாளம் உள்ள லிங்கம்.
ஆதியில் தோன்றிய சுயம்பு மூர்த்தி ஆவுடையாரின் கீழே இருப்பதாகவும், தற்போதுள்ள லிங்கம் அதன் மீது ஸ்தாபிக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.
கார்த்திகை சோம வாரங்களில் 108 மற்றும் 1008 சங்காபிஷேகம் நடத்துகின்றனர்.
ஆவணி முதல் நாளன்று ஏடு எதிர் ஏறிய சம்பவத்தை ஐதீகமாக கொண்டாடுகின்றனர்.
தேவார திருத்தலம்