பஞ்ச பூத ஸ்தலங்களுள் இத்தலத்தை ப்ருத்வி ஸ்தலமாக போற்றுகின்றனர். முக்தி அளிக்கும் ஏழு ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. பூமி தேவியின் உந்தித் தானமாக விளங்கும் ஸ்தலம்.
சிவபெருமானுடைய கண்களை உமா தேவியார் விளையாட்டாக தனது கைகளால் மூடினார். அதனால் சூரிய-சந்திரர்கள் மறைந்து எல்லா லோகங்களிலும் இருள் சூழ்ந்தது. விளையாட்டு வினையாகி, கயிலையிலிருந்து காஞ்சி வந்த பார்வதி இங்குள்ள கம்பை ஆற்றங்கரையில் மணலினால் சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி வழிபட்டு வந்தாள். இத்தலத்தில் தவம் மேற்கொண்டிருந்த அம்பிகையின் முன்னால் தோன்றிய சிவபெருமான், பார்வதியை சோதிக்க எண்ணி, தன் ஜடாமுடியிலிருந்து கங்கையை வெளிப்படுத்தி, கம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கை உண்டாக்கினார்.
வெள்ளத்தைக்கண்டு பயந்த அன்னை, தான் பூஜை செய்யும் மணல் லிங்கம், ஆற்றுப்பெருக்கில் அடித்து செல்லாமல் இருக்க அதை தாவி கட்டிக் கொண்டார். இறுகத் தழுவிக் கொண்டதால் இறைவனுக்கு தழுவக் குழைந்த நாதர் என்னும் பெயர் வந்தது. வளைத் தழும்பும், முலைத் தழும்பும் தழுவிய சுவடுகளாக நிலைபெற்று காட்சி தந்தவர் வெள்ளக் கம்பர் என்றும், பின்னர் அம்பிகைக்கு அருள்புரிந்தவர் நல்லக் கம்பர் என்றும், அம்பிகை பூஜை செய்யும் அழகை மறைவாக கண்காணித்தவர் கள்ளக்கம்பர் என்றும் பெயர்களைக் கொண்டனர். இவர்களின் சந்நிதிகள் இங்கே உள்ளன.
திருவொற்றியூர் எல்லையைக் கடந்தவுடன், இரண்டு கண்களின் பார்வையை இழந்த சுந்தரமூர்த்தி நாயனார், இத்தலம் வந்து தனது இடது கண் பார்வையை, இவ்விறைவன் அருளால் பெற்றார் என ஸ்தல வரலாறு. கண்பார்வையில் கோளாறு உள்ளவர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை செய்து நலம் பெறலாம் என அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
கிருஷ்ண தேவ ராயரால் கட்டப்பட்ட 192 அடி உயர ராஜ கோபுரமும், ஐந்து பிரகாரங்களை உள்ளடக்கியும், நான்கு மாட வீதிகளையும் கொண்டுள்ள மிகப் பெரிய கோயில்.
கரிகால சோழன் திருப்பணி செய்த ஸ்தலம். பல சிவாலயங்களுக்கு திருப்பணி செய்தவரும், ஸ்தலத்திற்கு ஒரு வெண்பா வீதம் க்ஷேத்ர வெண்பாக்களைப் பாடியவருமான ஐயடிகள் காடவர் கோன் அரசாட்சி செய்த ஸ்தலம்.
ஐயடிகள் காடவர் கோன் நாயனார், திருக் குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோர் சிவ பெருமான் அருள் பெற்று முக்தியடைந்த ஸ்தலம்.
பங்குனி உத்திரத்தன்று அன்னையை திருமணம் செய்து கொண்டதால் இது திருமணத்தலமாக விளங்குகிறது. தேவாரத்திருத்தலம், பஞ்ச பூதஸ்தலங்களுள் ஒன்று, முக்தி ஸ்தலங்கள் ஏழினுள் ஒன்று.
பஞ்ச பூத ஸ்தலங்கள்:
1. காஞ்சிபுரம் - ஏகாம்பரேஸ்வரர் - நிலம் (ப்ருத்வி)
2. திருவானைக்காவல் - ஜம்புகேஸ்வரர் - நீர் (அப்பு)
3. திருவண்ணாமலை - அண்ணாமலையார் - நெருப்பு (அக்னி)
4. காளஹஸ்தி - காளத்திநாதர் - காற்று (வாயு)
5. சிதம்பரம் - மூலட்டானேஸ்வரர் - ஆகாயம் (ஆகாஷ்)
சப்த முக்தி ஸ்தலங்கள்:
அயோத்தி, மதுரா, மாயை, காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை.