மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்தி, தானங்கள் பல செய்து கொண்டிருந்த மகாபலியின் வேள்விச்சாலைக்கு, வாமனனாக வந்த மகாவிஷ்ணு, தனக்கும் தானமாக மூன்றடி மண் தரும்படி கேட்டார். இந்த சிறுவனின் பாத அளவிற்கு மூன்றடி அளந்து கொடுப்பதால், பெரிய நஷ்டம் ஒன்றுமில்லை என்று எண்ணிய மகாபலி, தானத்திற்கு இசைந்தான்.
வாமனனாக வந்தவன் விஸ்வரூபம் எடுத்து திரிவிக்ரமனாக மாறி, பூமியை ஓரடியாகவும், வானத்தை இரண்டாவது அடியாகவும் அளந்து விட்டு, மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே? எனக் கேட்டார். கொடுத்த வாக்கை காப்பாற்ற, தனது தலையை காண்பித்து அளந்து கொள்ள சொன்னார் மகாபலி என்பது புராண வரலாறு.
இந்த திரிவிக்ரம கோலத்தை காணும் பாக்யம் தனக்கு கிட்டவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த ம்ருகண்டு மகரிஷி, நாரதரின் யோசனைப்படி, இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டார்.
ம்ருகண்டு முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்த வயதான வேதிய தம்பதியினர் பசியாற உணவு கேட்டனர். முனிவரின் மனைவி மித்ரவதி அவர்களுக்கு விருந்தோம்பல் செய்தாள். விருந்துண்டவர்கள் திடீரென மறைந்தனர். அங்கு பிரத்யட்சமான பெருமாள் ம்ருகண்டு முனிவர் வேண்டியபடி, திரிவிக்ரம கோலத்தை காட்டியருளினார். பின்னர் முனிவரின் வேண்டுகோளை ஏற்று, இங்கேயே கோயில் கொண்டார் என ஸ்தல வரலாறு.
க்ஷேத்ராடனம் செய்து கொண்டிருந்த பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களும், ம்ருகண்டு ஆஸ்ரமம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது பெருத்த மழை பெய்து கொண்டிருந்தது.
முதலில் வந்த பொய்கை ஆழ்வார், ஆஸ்ரமத்திற்குள் இருந்த முனிவரிடம் இன்றிரவு மட்டும் இங்கு தங்க இடம் உண்டா? எனக் கேட்டார். ஒருவர் படுக்கலாம் என இடைக்கழியைக் காண்பித்தார் முனிவர். சிறிது நேரம் கழித்து வந்த பூதத்தாழ்வாரும் இதே கோரிக்கையை முன்வைக்க, இருவர் அமரலாம் உள்ளே வாரும் என பதில் வந்தது. மூன்றாமவராக வந்த பேயாழ்வாரும் இதே விண்ணப்பத்துடன் வந்தார். ஒருவர் படுக்கலாம், இருவரானால் அமரலாம், மூவரானால் - மூவரும் நிற்கலாம் என பதில் வந்தது.
மழையும் நிற்கவில்லை. கும்மிருட்டு நேரம். மூவரும் நின்றபடியே, பெருமாளுடைய கல்யாண குணங்களைப் பற்றி பாடிய வண்ணமிருந்தனர். திடீரென நெருக்கம் அதிகமானது. நான்காவதாக ஒரு ஆள் வந்திருப்பதை மூவரும் உணர்ந்தனர். ஞானக்கண்ணால், வந்திருக்கும் நான்காவது ஆள் நாராயணனே என தெரிந்துகொண்டு, திருவந்தாதி பாடினர். அத்துணை பெருமைகளை உடைய ஸ்தலம்.
வாமன - திரிவிக்ரம அவதார ஸ்தலம். கண்ணபிரானுக்கு உகந்த ஸ்தலம். திவ்யபிரபந்தம் முதன்முதலில் பாடப்பெற்ற ஸ்தலம் போன்ற பெருமைகளுடைய ஸ்தலம்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - பஞ்ச கிருஷ்ணாரண்யங்களில் ஒன்று.