மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமான் மிகுந்த வரப்பிரசாதி. ஆறடி உயரமும் மூன்றடி பருமனும் கொண்ட ஆஜானுபாகுவான பெரிய திருமேனி. வலது கால் பாதம் பீடத்திலும், இடது கால் பாதம் நம்மை நோக்கியும் உள்ளது. கிழக்கு பார்த்த மூலஸ்தானம்.
கழுத்தில் ருத்ராட்ச மாலை, வலது கையில் ஒடிந்த தந்தம், இடது கையில் மோதகம், இடுப்பில் பாம்பு ஒட்டியாணம் ஆகியன கொண்ட அழகான தோற்றம். கண்கள், மகுடம், திருவாசி ஆகியவை வெள்ளியினால் செய்யப்பட்டவை. தெருவிலிருந்து பார்த்தாலே தரிசிக்கும் விதமான அமைப்பு.
முன் மண்டபத்தின் விதானத்தில் 12 ராசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கருவறையின் தென்புறச் சுவரில் பன்னிரெண்டும், வடபுறச் சுவரில் பன்னிரெண்டுமாக பெரிய ஓவியங்கள் விநாயகப் பெருமானின் திருவிளையாடல்களை விளக்குகின்றன.
பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், திருநீறு, பஞ்சாமிர்தம் என ஒவ்வொரு அபிஷேகத்திலும் ஒரு எழிற்கோலம் காட்டுகிறார். அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திர நாட்களிலும் விதவிதமாக அலங்காரம் செய்கின்றனர். இங்குள்ள நந்தவனத்து மலர்கள் விநாயகரை அலங்கரிக்கின்றன.
தனி ஹோம மண்டபம் உள்ளது.
தினமும் அதிகாலை 5.30 மணிக்கு உபயதாரர்களுக்காக கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது.
தினசரி இரவு 7.00 மணிக்கு தங்கத்தேர் பவனி (கோவிலுக்குள் உலா) நடைபெறுகிறது.
காலை 6.30 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை தினங்களில் மாலை 7.00 மணிக்கு வீதிவுலா நடைபெறும்.