தட்ச யாகத்தில் கலந்து கொண்ட பிரம்மனின் தலையை, சிவபெருமானின் கட்டளைக்கு இணங்க, காளி உடைத்தபோது, அவை நான்கு துண்டுகளாக சிதறி விழுந்தன. பெரிய ஓடு விழுந்த இடம் பேரோடு என்றும், சிறிய ஓடு விழுந்த இடம் சித்தோடு என்றும், வெள்ளைப்பகுதி (மூளை) விழுந்த இடம் வெள்ளோடு என்றும் பெயர்களைக் கொண்டன.
சிதறியதால், இறைவன் ஆர்த்தர கபாலீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். ஆர்த்தர என்றால் பாதி (பாதி ஓடு) என்று பொருள். இன்று ஆருத்ர கபாலீஸ்வரர் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
காளியால் தண்டிக்கப்பட்ட பிரம்மன், தனது தவறை உணர்ந்து சிவபெருமானைக் குறித்து தவமிருந்தார். தன்னை மறந்து தவம் புரிந்ததால், இத்தலம் மறந்தை எனவும் பெயர் பெற்றது.
கயிலையில் சிவபெருமான் ஓதிய மந்திரத்தை கவனியாது இருந்த பார்வதி, சாபம் கொண்டு மயிலாகப் பிறந்து இத்தலத்தில் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. பெரு நல்லாள், சிறு நல்லாள் எனும் இரு தேவ மாதர்கள் இவ்விறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர்.
தாண்டவ முதலியார் எனும் சிவநேசச் செல்வர், நெசவுத் தொழில் செய்து கொண்டு, தன்னால் இயன்ற தொண்டுகளை சிவனார்க்குச் செய்து வந்தார். ஒரு நாள், வயதான கிழவர் ஒருவர், தாண்டவ முதலியாரிடம் இரு முழத் துண்டு ஒன்றினை வேண்டிப் பெற்றார். அந்தத் துண்டை நெசவுக் கூலியாகத் தன் முதலாளியிடமிருந்து பெற்று, அதனைக் கிழவருக்குத் தந்தார் தாண்டவ முதலியார். மறுநாள் மூலஸ்தானம் திறக்கப்பட்டபோது, தாண்டவராயரின் இரு முழத் துண்டு இறைவனின் திருமேனியை அலங்கரித்துக் கொண்டிருந்தது.
இரவு நேரத்தில் அத்துமீறிப் பிரவேசித்து இச்செய்கையைச் செய்துவிட்டார் தாண்டவ முதலியார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, தீர விசாரிக்காமல், அவரை நையப் புடைத்தனர். அப்போது அசரீரி வாக்காக உண்மை வெளிப்பட்டு, தாண்டவராயர் காப்பாற்றப்பட்டார்.