பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தத்தின் பங்கை மகரிஷிகளும் பெற்றனர். அதில் ஒரு பங்கு கௌசிக மகரிஷிக்கும் கிடைத்தது. தனக்கு கிடைத்த பங்கான அமிர்தத்தை திருப்பழனம் கொண்டு வந்தார். அந்த அமிர்தத்தை அவரிடமிருந்து பிடுங்கிக் கொள்ள அசுரர்கள் துரத்தி வந்தனர். இறைவன் அய்யனாரை ஏவினார். அய்யனார் அசுரர்களை வென்று அமிர்தத்தை காப்பாற்றி மகரிஷியிடம் கொடுத்தார்.
கௌசிகர், அமிர்தத்தைக் கொண்டு லிங்கம் ஒன்றை அமைத்து அமிர்தலிங்கேச்வரர் என்ற பெயரைச் சூட்டி, பூஜித்து வழிபட்டு வந்தார்.
ஏழு சப்த ஸ்தான ஸ்தலங்களுள் திருப்பழனம் இரண்டாவது. இங்கு சப்த ஸ்தான பல்லக்கு விழா விமரிசையாக நடக்கும் (ஏப்ரல்/மே). மஹா சிவராத்ரி, அப்பர் காட்சி ஆகிய விழாக்கள் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.
குபேரன், திருமால், லட்சுமி ஆகியோர் இத்தலம் வந்து இவ்விறைவனைப் பூஜித்து, அவரவர் ஊருக்குத் திரும்பப் பயணித்ததால், இவ்விறைவன் ஸ்ரீ பிரயாணேச்வரர் என்ற பெயரைக் கொண்டார். இவ்வூர் பிரயாணபுரி எனப்படுகிறது. பயணம் மேற்கொள்ளும் அனைவரும் பயணம் மேற்கொள்ளும் முன்பாக ஆபத்சகாயேஸ்வரரை வழிபடுகின்றனர்.
கார்த்திகை பௌர்ணமியில் இங்குள்ள ஆறுமுகருக்கு நீலோத்பவ மலர்களால் அர்ச்சித்து பூஜித்தால் பேசாதவனும் பேசுவான். இத்தலத்து தட்சிணாமூர்த்தி சந்நிதி முன்பு அமர்ந்து பஞ்சாட்சர மந்திரம் ஜெபித்தால் கோடி புண்யம் என்பார்கள்.
காலனால் துரத்தப்பட்ட சுசரிதன் எனும் சிறுவன் இத்தலம் வந்து இவ்விறைவனிடம் அபயம் கேட்டான். சுசரிதனுக்கு ஒளிப்பிழம்பாக ஜோதி வடிவில் காட்சி தந்தார் இறைவன். தமது அருளையே அவனுக்கு கவசமாக்கி திருவையாறுக்கு அனுப்பி வைத்தார். இதனால் ஆபத்சகாயேச்வரர் எனும் பெயர் கொண்டார். திருவையாற்றில் ஐயாறப்பர் ஆட்கொண்டான் மூலமாக யமனை வதைத்து சுசரிதனைக் காப்பாற்றினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
தேவாரத்திருத்தலம் - சப்த ஸ்தான ஸ்தலங்களுள் ஒன்று.