ஆதியில் திருக்கரந்தை, கல்யாணபுரி என்றெல்லாம் அழைக்கப்பட்ட இவ்வூர் குன்றுகளுக்கு இடையே அமைந்து இருப்பதால் கல்லிடைக்குறிச்சி எனப் பெயர் கொண்டது. அதாவது கல் - இடை - குறிச்சி என்ற பொருளில் உள்ளது. வடமொழியில் சிலாசாலிபுரம் என்பார்கள்.
விஷ்ணுதர்மன் என்ற அரசன் யாகங்கள் பல செய்து வந்தான். பரமசிவம், குபேரன், தேவகணங்கள், அகஸ்தியர் ஆகியோரை வரவழைத்து வழிபட்டான். யாகத்திற்கு வந்த மஹாவிஷ்ணுவை பூஜித்தான்.
தாமிரபரணி, மணிமுத்தாறு, வரட்டாறு ஆகிய மூன்று ஆறுகளின் சங்கமமே வராஹதீர்த்தம் என்பர். இந்த முக்கூடலில் குடமுருட்டி வந்த சிலையே ஸ்ரீ வராஹர். பிரம்மா, ருத்ரன், இந்திராதி தேவர்கள், வசிஷ்டர் ஆகியோர் கூடியிருக்க, வேத முழக்கங்களுடன் இந்த வராஹரை இவ்வாலயத்தில் குபேரன் பிரதிஷ்டை செய்தான் என ஸ்தல வரலாறு விவரிக்கின்றது.
தாமிரபரணியும் அதன் கிளையான கன்னடியன் கால்வாயும் அழகாக பாய்ந்தோட, நாற்புறமும் பசுமையான வயல்களும், மேற்கே கம்பீரமாக நிற்கும் பொதிகை மலையும், கல்யாண தீர்த்த அருவி, பாண தீர்த்த அருவி, மணிமுத்தாறு அருவி என நீர்வளங்கள் மிகுந்தும் காணப்படுவதே கல்லிடைக்குறிச்சி கிராமம்.
முத்துஸ்வாமி தீட்சிதரின் 'ஸ்ரீ லட்சுமி வராஹம் பஜேஹம்', 'சங்கர பிரியகரம் குபேர பிரதிஷ்டிதம்' ஆகிய ஆபோஹி ராகப் பாடல்களின் மூலம் ஸ்தல பெருமையை அறியலாம்.