விதிமுறைகளை கடைப்பிடிக்காது பிரம்மன் நடத்திய வேள்வியின் யாக குண்டத்திலிருந்து கேசன் எனும் அரக்கனும், கேசி எனும் அரக்கியும் தோன்றினார்கள். பிரம்மனிடமிருந்து சாகா வரமும் பெற்று தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தார்கள்.
கேசனுடன் மற்போர் புரிந்து தோற்கடித்து அவனை கீழே தள்ளி, அவன் மீது ஆதிசேஷனை பாயாக விரித்து அதன் மேல் பள்ளி கொண்டார் திருமால். சாகாவரம் பெற்ற கேசன் தப்பாமலிருக்க, அவன் மீது சயனித்து அவனை ஒடுக்கி விட்டார்.
கேசனின் தோல்வியைப் பொறுக்காத அவனது சகோதரி கேசி எனும் அரக்கி, பழி வாங்கும் விதமாக தாம்ரபரணியை பிரளயமாக பெருக்கி அனுப்பினாள். பூமாதேவி இந்த இடத்தை மேடாக்கினாள். தாம்ரபரணி இரண்டாக பிரிந்து ஒரு மாலை போல் கோவிலைச் சுற்றி வட்டமாக சென்றது. இதனால் இவ்வூருக்கு திருவட்டாறு எனப் பெயர் வந்தது.
கேசனை ஒடுக்கியதால் திருமாலுக்கு ஆதி கேசவர் எனும் திருநாமம். நதிகள் இரண்டாக பிரியும் இடத்திற்கு மூவாத்து முகம் (அ) கோதை பிரளி என்று பெயர். (தாம்ரபரணி - பரளியாறு - கோதையாறு மூன்றும் கூடுமிடம்) சித்திரை விழாவின் போது இங்கு தீர்த்தவாரி நடக்கும். தளி எனுமிடத்திலுள்ள சிவாலயம் அருகே தீர்த்தவாரி நடக்கும்.
ஆற்காட்டு நவாப்பின் படைகள் இவ்வாலயத்தை சூறையாடி விட்டு விக்ரகத்தை எடுத்துச் சென்றனர். உற்சவ விக்ரகம் நகர்ந்து கொண்டே இருப்பது கண்டு அதன் காலில் துளையிட்டு கயிற்றால் கட்டி வைத்தான் நவாப். அவன் மனைவிக்கு தீராத வயிற்று வலி வந்து கஷ்டப்பட்டாள். விக்ரகத்தை திருப்பிக்கொடுத்ததும் வயிற்று வலி நீங்கி நலன் பெற்றாள் எனக் குறிப்பொன்று கூறுகிறது.
நன்றிக் கடனாக தங்கத்தட்டு, தங்க தலையணை போன்றவற்றை நவாப் கொடுத்துள்ளார். உற்சவருக்கு குல்லாய் போட்டு யோக மண்டபத்தில் அல்லா பூஜை எனும் விசேஷ பூஜை செய்கின்றனர்.
சந்திரன், பரசுராமர் வழிபட்ட தலம். சைன்ய மஹா பிரபு இங்கு வந்துள்ளார். வசிஷ்ட மகரிஷி வாசம் செய்த தலம். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.