ஸ்ருஷ்டி பீஜங்களையும், வேதங்களையும் பிரளய வெள்ளத்திலிருந்து காப்பாற்றி பாதுகாக்க உபாயம் கூறும்படி, சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டார் பிரம்மன். அமுதம் - மண் இவை இரண்டையும் சேர்த்துப் பிசைந்து குடம் ஒன்றை உருவாக்குமாறும், அதனுள் அமிர்தத்தை நிரப்பி, ஸ்ருஷ்டி பீஜங்களையும் வேதங்களையும் அதில் வைத்து, குடத்தின் வாயில் மாவிலை - வில்வம் - பூணூல் - தேங்காய் போன்றவைகளால் அலங்கரித்து மேரு மலைக்கருகே சேர்த்து விடுமாறு கூறினார் சிவபெருமான். பிரம்மனும் அவ்வாறே செய்தார்.
பிரளய வெள்ளம் உலகம் முழுவதையும் தன்னுள் மூழ்கடித்துக் கொண்டு எங்கும் பரவி ஓடி வருகையில் மேருமலையில் வைத்த அமுத கும்பம் தென் திசை நோக்கி மிதந்து வந்தது. அதனுள் வைக்கப்பட்டிருந்த மாவிலை முதலான பொருட்கள், பல் வேறு இடங்களில் சிதறி விழுந்தன.
தென்திசை நோக்கி மிதந்து வந்த கும்பம் இங்கு தங்கிவிட்டது. கிராதமூர்த்தியாக வடிவெடுத்து (வேடன் வடிவில்) தோன்றிய சிவபெருமான் இந்த கும்பத்தின் மீது அம்பு எய்தார். கும்பத்தின் முகம் சிதைவுற்று நான்கு திசைகளிலும் அமிர்தம் சிதறி ஓடியது. அமிர்தத்தில் நனைந்த வெண்மணலை லிங்க வடிவமாக்கி அதனுள் ஒடுங்கினார் சிவபெருமான். இந்த லிங்க வடிவமே கும்பேஸ்வரர். அதே இடத்தில் கும்பேசர் கோவில் தோன்றியது என ஸ்தல வரலாறு.
கும்பத்திலிருந்த அமிர்தம் சிதறிய இடங்கள் ஐந்து. இதை பஞ்ச குரோச ஸ்தலங்கள் என்பர். அவை 1.திருவிடைமருதூர், 2. திருநாகேஸ்வரம், 3.தாராசுரம், 4. ஸ்வாமிமலை, 5. திருப்பாடலவனம் என்பன. (ஒரு குரோசம் என்பது 10 மைல் தூரம்)
கும்பேஸ்வரருடைய உற்சவ ஸ்தலங்கள் ஏழு. இதை சப்தஸ்தான ஸ்தலங்கள் என்பர். அவை -1.கும்பகோணம், 2. கலயநல்லூர், 3. திருவலஞ்சுழி, 4. தாராசுரம், 5. ஸ்வாமிமலை, 6. கொட்டையூர் 7. மேலைக்காவேரி.
கும்பத்தின் வாயை அலங்கரித்த மாவிலை - வில்வம் - புஷ்பம் - தேங்காய் - பூணூல் - தர்ப்பை - உறி போன்ற பொருட்கள் சிதறி விழுந்த இடங்களிலெல்லாம் ஒவ்வொரு லிங்கங்களாக தோன்றின. இதைப் பற்றிய விபரங்களை அந்தந்த ஸ்தல வரலாற்றில் காணலாம்.
தேவாரத்திருத்தலம் - சக்தி பீடம்