காரியார் - உடைய நங்கை தம்பதியினருக்கு குழந்தைப்பேறு இல்லாததால், புத்ர பாக்யம் நல்குமாறு எம்பெருமானை வேண்டினார்கள். தானே குமாரனாகப் பிறக்கப் போவதாக எம்பெருமான் தெரிவித்தார். பிறந்த குழந்தைக்கு சடகோபன் எனப் பெயரிட்டனர். சடம் என்ற வாயுவை ஒட்டிப் பிறந்ததால் இந்தப் பெயர் வந்தது. இவரே பின்னாளில் நம்மாழ்வார் என அழைக்கப்பட்டார்.
திருவரங்கனின் அபிமானமாக கருதப்பட்டதால் நம்மாழ்வார் என்ற திருநாமம். பொலிந்து நின்ற பிரான் சூடிய மகிழ மாலையை விரும்பி அணிபவராதலால் வகுளாபரணர் எனப் பெயர் கொண்டார்.
பிறந்தது முதல் குழந்தைகளுக்குரிய இயல்புகள் ஏதுமின்றி மாறுபட்டிருந்ததால் மாறன் எனப் பெயரிட்டு உற்சவ மூர்த்தியின் முன்பாக விட்டனர். குழந்தை அருகிலிருந்த புளிய மரத்து பொந்தில் புகுந்து கொண்டது. கண் விழித்துப் பார்த்தல், பேசுதல் ஏதுமின்றி 16 ஆண்டுகள் யோக நிலையிலிருந்தது.
திருக்கோளூரை சேர்ந்த மதுரகவி ஆழ்வார், ஒரு ஒளியின் வழிகாட்டுதலில் இப்புளிய மரத்தை அடைந்து குழந்தையைக் கண்டார்.
'செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்?' என சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்டார். (அதாவது உயிரில்லாத உடம்பில் ஆத்மா புகுந்து, எதனை அனுபவித்து எங்கே இருக்கும் என்ற வினா)
'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்' என பதிலளித்தார் சடகோபன். (அதாவது அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப - துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும் என்று பொருள்)
குழந்தையின் ஞானத்தை தெரிந்து கொண்டு குருவாகவும், தெய்வமாகவும் ஏற்றுக் கொண்டார் மதுரகவி ஆழ்வார்.
குருகு எனும் சொல் நாரை - கோழி போன்ற பட்சிகளைக் குறிப்பதாகும். அதனால் பட்சியின் பெயரால் இந்த ஸ்தலம் விளங்குவதாகக் கூறப்படுகிறது. குருகன் என்ற அரசன் ஆட்சி புரிந்த ஸ்தலம் என்பதாலும் இந்தப் பெயர் வந்ததாகக் கூறுவர். குருகு எனப்படும் சங்கு பெருமாளை வழிபட்டதால் இந்தப் பெயர் வந்திருக்கக் கூடும் என்ற கருத்தும் உள்ளது.
பிரம்மாவிற்கு குருவாக இருந்து உபதேசம் செய்த ஸ்ரீமந் நாராயணன், இத்தலத்தில் குருவாக இருப்பதால் குருகூர் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர்.
ஆதிசேஷனே உறங்காப்புளியாக வாழும் இடமாதலால் க்ஷேம க்ஷேத்திரமாக என்று கூறுவார்கள். மணவாள மாமுனியின் அவதார ஸ்தலம்.
பூமி பிராட்டியுடன் வராஹ அவதாரக் காட்சியை காட்டியருளிய ஸ்தலம். இந்திரன் தன் மாதா - பிதாவை உபசரிக்காததால் சபிக்கப்பட்டு, பின்னர் எம்பெருமானை வழிபட்டு நற்கதியடைந்த ஸ்தலம்.
லட்சுமி தேவி பெருமாளை அடைய வேண்டி பிரார்த்திக்க, எம்பெருமான் பிரம்மசார்ய கோலத்தில் இருந்ததால், லட்சுமியை மகிழ மலர் மாலையாக மாற்றி மார்பில் தரித்துக் கொண்டதாக ஐதீகம்.
ஆதி க்ஷேத்திரம், வராஹ க்ஷேத்திரம், தீர்த்த க்ஷேத்திரம், தாந்த க்ஷேத்திரம், சேஷ க்ஷேத்திரம் என்றெல்லாம் போற்றுகின்றனர். திருக்குருகூரை 'பரம பதத்து எல்லை' என்று ஸ்ரீ ராமாநுஜர் கூறியிருக்கின்றார்.