அசுரர்களுடன் போர் புரிந்து கொண்டிருந்த இந்திரன், அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அர்ஜுணனின் உதவியை நாடினான். அர்ஜுணன் அசுரர்களை தோற்கடித்து இந்திரனுக்கு உதவினான். அதற்குப் பரிசாக, தான் பூஜித்து வந்த கோபால சுவாமி விக்ரகத்தை அர்ஜுணனுக்குப் பரிசாக வழங்கினான் இந்திரன். அந்த விக்ரகத்தை பக்தி சிரத்தையுடன் வழிபட்டு வந்தான் அர்ஜுணன்.
கிருஷ்ண பகவான் கூறியபடி, கலியுக ஆரம்பத்தில் அந்த விக்ரகத்தை கங்கையில் போட்டு விட்டான் அர்ஜுணன்.
கிருஷ்ணரின் திருவுளப்படி, மணப்படை நாட்டு மன்னன் ஸ்ரீபல்கி என்பவன் அந்த விக்ரகத்தை எடுத்து தாமிரபரணி நதிக்கரையில் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
பிரம்மாவிடமிருந்து மது-கைடப அரக்கர்கள் கவர்ந்து சென்ற நான்கு வேதங்களையும் மச்சாவதாரம் எடுத்து மீட்டார் விஷ்ணு மூர்த்தி. மீண்டும் வேதங்களை உபதேசித்தார். இதனால் வேதநாராயணன் எனும் திருநாமம் கொண்டார்.