காஞ்சியில் மணல் லிங்கம் அமைத்து காமாட்சியம்மை வழிபட்டு வந்த நாட்களில், அன்னைக்கு தோழியாக வந்த அம்பிகா என்னும் பெண், கீழம்பியில் ஒரு நந்தவனம் அமைத்து, அதிலிருந்து மலர்களைப் பறித்து, தினமும் வழிபாட்டிற்கு அனுப்பி வந்தாள். நந்தவனத்தில் ஒரு சிவலிங்கமும் நிறுவி பூஜித்து வந்தாள். அந்த சிவலிங்கமே அம்பிகாபதீஸ்வரர். பின்னாளில் காமாட்சியன்னை இங்கு கோயில் கொண்டாள் என ஸ்தல வரலாறு.
காஞ்சி மடத்தின் 60வது பீடாதிபதி - ஸ்ரீ அத்யாத்ம பிரகாசேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பிருந்தாவனம் அமையப் பெற்றுள்ளது. காஞ்சி மஹாஸ்வாமிகளுக்கு மிகவும் இஷ்டமான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று என்கின்றனர். அடிக்கடி இங்கு வந்து ஈஸ்வரனையும், அம்பாளையும் பூஜித்து தியானம் செய்வார் மஹா ஸ்வாமிகள்.
கம்பரும், அவரது மனைவி நிகர்த்தவல்லியும் கீழம்பியில் நீண்ட நாட்கள் தங்கி அம்பிகாபதீஸ்வரரை பூஜித்து புத்ர பாக்யம் வேண்டினர். இவ்விறைவனின் அருளால் பிறந்த ஆண் குழந்தைக்கு அம்பிகாபதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் என ஸ்தல வரலாறு.
எம். எஸ். சுப்புலட்சுமி குடும்பத்தினர் ஒரு ட்ரஸ்ட் நிறுவி, ஆலயத்தின் நித்ய பூஜைகளுக்கு உதவுவதாக தெரிவிக்கின்றனர். காஞ்சி சங்கர மடம் நிறைய உதவிகளை செய்துள்ளது.