வாயு தேவனுக்கும், அக்னி பகவானுக்கும் ஏற்பட்ட தர்க்கத்தில் தன்னால் சுட்டெரிக்க முடியாத பொருளே கிடையாது என்றும், தான் எரித்து தூய்மையாக்கப்பட்ட திருநீறு போன்று பல பொருட்கள் இருப்பதாகவும் பெருமை பேசினார் அக்னி. "நல்லது - கெட்டது எல்லாவற்றையும் விழுங்கும் நீ புனிதமானவனல்ல, கண்டதை தின்பவன், அதனால் என்றென்றும் தீரா பசியுடன் அலைவாயாக" என்று சபித்து விடுகிறார் வாயு தேவன்.
பிரஹஸ்பதியிடம் சென்று, தனது சாபம் நீங்கவும், கண்டதை தின்பவன் என்ற அவப்பெயர் போகவும் வழி சொல்லுமாறு கேட்டார் அக்னி. பிரஹஸ்பதியின் யோசனைப்படி புன்னாகவனம் எனும் இத்தலத்திற்கு வந்து தீர்த்தம் ஒன்றை அமைத்து, அனுதினமும் தவறாது இங்கிருந்த சுயம்பு லிங்கத்தை ஆச்சாரமாக பூஜை செய்து வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்து பிரத்யட்சமான இறைவனிடம் தனது சாபம் நீங்கவும், தான் சுட்டெரிப்பதால் தனது புனிதம் கெடாதிருக்க வேண்டுமென்றும், தனது பெயரால் இவ்வூர் இருக்க வேண்டுமென்றும் வரங்களை கோரிப் பெற்றார்.
தனது தாயின் வழிபாட்டிற்காக 107 சிவலிங்கங்களை அமைத்து தந்த பாணாசுரன் எனும் அசுரன், நூற்றி எட்டாவதாக இவ்வாலயத்திலுள்ள அக்னீஸ்வரரை பெயர்த்தெடுக்க முற்பட்டான். எவ்வளவு முயன்றும் லிங்கத்தை பெயர்த்தெடுக்க முடியவில்லை. பின்னர் தாயை இங்கு அழைத்து வந்து பூஜை செய்யச் சொன்னான். இருந்த இடத்திலிருந்தே பூஜையை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக தலையை சாய்த்து ஏற்றுக் கொண்டாராம்.
புன்னாக வனத்தில் சுயம்புவாக தோன்றியவர் என்பதால் புன்னாகவனநாதர் என்ற திருநாமமும், அக்னி பகவான் வழிபட்டதால் அக்னீஸ்வரர் என்ற பெயரும், பாணாசுரனின் தாயாரது பூஜையை தலை சாய்த்து ஏற்றுக் கொண்டதால் கோணற்பிரான் என்றும் பெயர் கொண்டார்.
அக்னி பூஜித்த காரணத்தால் அக்னீசம் என்றும், ஸ்ரீ வாகீச மூர்த்திகள் சரணம் அடைந்த காரணத்தால் சரண்யபுரம் என்றும், அஜமுகியின் புத்திரர்களான வாதாபி, வில்லவனுக்கு பயந்து இங்கு அடைக்கலம் புகுந்ததால் புகலூர் என்றும் இவ்வூருக்கு பெயர் வந்தது.
அடியார்களுக்கு உணவும் உடையும் அளிப்பதற்கு பரவையார் மாளிகையில் பொன் தேவைப்பட்டது. அதை பெறுவதற்காக திருப்புகலூர் வந்த சுந்தரர் அக்னீஸ்வரரை வழிபட்டு விட்டு, இளைப்பாறினார். ஆலய திருப்பணிக்காக வைத்திருந்த செங்கற்களை தலையணையாக வைத்துக் கொண்டு உறங்கினார். மறு நாள் காலை அவை தங்கக் கட்டிகளாக மாறியிருந்தன. இறைவனின் கருணையை நினைத்து வியந்து "தம்மையே புகழ்ந்திச்சை பேசினினும்" என்ற பதிகத்தைப் பாடினார்.
க்ஷேத்ராடனங்களை முடித்துக் கொண்டு திருப்புகலூர் வந்த அப்பர் பெருமான், இவ்வாலயத்தில் உழவாரப்பணி செய்து வந்தார். இவரை சோதிக்க எண்ணிய இறைவன், உழவாரம் செய்யும் இடமெல்லாம் பொன்னையும், நவரத்தினங்களையும் போட்டு வைத்தார். கற்களையும், ஓட்டாஞ்சில்லியையும் - பொன்னையும், நவரத்தினங்களையும் ஒன்றாக கருதும் அப்பர் அவற்றையும் வாரி வெளியே எறிந்தார். பிறிதொரு சமயம் ரம்பை-திலோத்தமை ஆகிய நடன மாதர்களை அனுப்பி மையலூட்ட செய்தார். திட சித்தராக இருந்தார் அப்பர் பெருமான்.
அப்பர் ஸ்வாமிகள் தமது இறுதிக் காலத்தை இத்தலத்திலேயே கழித்தார். சித்திரை மாதம் சதய நட்சத்திரத் திருநாளில் சிவனடி அடைவதை உணர்ந்து "புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்" என்று பாடிவிட்டு நிரந்தரமாக அடைக்கலம் புகுந்தார் அப்பர் பெருமான்.
அக்னி பகவான் பாப விமோசனம் பெற்ற ஸ்தலம் என்பதாலும், சுந்தரருக்கு செங்கற்கள் பொன் கட்டிகளாக மாறிய ஸ்தலம் என்பதாலும், புதியதாக வீடு கட்டுபவர்கள் இங்கு வந்து செங்கற்களை வைத்து வாஸ்து பூஜை செய்கின்றனர்.
அம்பாளை சாயரட்சை வேளையில் ராஜராஜேஸ்வரியாக வழிபடுவர். திருமணத்தடை உள்ள பெண்கள் இந்த அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி பிரார்த்தித்துக் கொண்டால் சீக்கிரம் கல்யாணம் நடைபெறும் என அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
முருக நாயனார் அவதரித்த ஸ்தலம்.
தேவாரத் திருத்தலம்.