இத்தலத்தில் தங்கி சிவபூஜை செய்து கொண்டிருந்த அகஸ்தியரை, வில்லவன்-வாதாபி எனும் இரண்டு அசுரர்கள் தொல்லை கொடுத்து வந்தனர். எல்லை மீறிப்போனதால் அவர்களை சம்ஹாரம் செய்து விட்டார் அகஸ்தியர். இதனால் அகஸ்தியரை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபடலானார். தனது சிவபூஜைக்கு தடங்கல் ஏதும் இல்லாதிருக்க இறைவனை வேண்டினார்.
தொடர்ந்து சிவபூஜை செய்து கொண்டிருக்கையில், அவருக்கு துணை இருக்க வீரபத்ரரை அனுப்பி வைத்தார் இறைவன். காவலாக வந்த வீரபத்ரர் இக்கோவிலிலேயே தங்கி விட்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
அகஸ்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய ஸ்தலம். அகஸ்தியர் கொண்ட தோஷத்தையும் போக்கியருளிய ஸ்தலம்.
அங்காரகன் எனப்படும் செவ்வாய் இங்கு தீர்த்தம் ஒன்றை அமைத்து இவ்விறைவனை வழிபட்டு நற்பலன்களை அடைந்தார். அகஸ்தியருக்கு சிவபெருமான் காட்சி தந்த நாள் செவ்வாய்க்கிழமை என்பதாலும், அங்காரகன் வழிபட்ட ஸ்தலம் என்பதாலும், இத்தலம் செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
வில்லவன் எனும் அசுரன் வதம் செய்யப்பட்டதால், இவ்ஊரை வில்லவன்பாக்கம் என அழைத்தனர். பின்னாளில் மருவி வில்லிவாக்கம் என்றானது.